Breaking News

மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான, தமிழ்மொழியை நாம் பாதுகாத்திட வேண்டும்: பொருநை இலக்கிய திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..

 


பிற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான நமது தாய் மொழியான தமிழ் மொழியை தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழாவைத் தொடங்கிவைத்து பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்டரங்கில், பொருநை இலக்கியத் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமை வகித்து பேசினார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பேசுகையில்:

பொருநை இலக்கியத் திருவிழா நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுவது சாலப் பொருத்தமாகும். பொருநை நாகரிகம் என்பது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைத்தான் கூறுவார்கள். வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகுவது திருநெல்வேலியாக இருந்தாலும் அது பயணிக்கிற இடமும், கடலோடு கலக்கின்ற இடமும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இருக்கிறது. ஆகவே 1986 இல் இருந்து நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டாலும், பொருநை நாகரிகத்தை பொருத்தவரைக்கும், இலக்கியத்தை பொருத்தவரைக்கும் நம்முடைய ஒன்றிணைந்த ஒரு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாகதான் பார்க்கப்படுகிறது என்பதை, புத்தகத்தை வாசிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. 

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் விழாவாக இந்த விழா நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ்மொழி வளர்ச்சி பெறவேண்டும், நம்முடைய பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பழங்கால வாழ்வியல் முறைகள் அனைத்தும் எதிர்கால சமுதாய தலைவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு இந்த பொருநை இலக்கியத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்படுவது ஒரு பொருத்தமான நிகழ்வு. எனென்றால், முதலாவது பொருத்தம் பொருநை நதிக்கரையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொருநை நதிக்கரை வரலாறாக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகள் நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இன்றும் அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் பண்டைய காலங்களில் நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள உலோகங்கள், தங்க ஆபரணங்கள், நெல்மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் மூலம் தெரியவருகிறது.

இன்னொரு பொருத்தம் நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இலக்கியத் திருவிழா என்றாலே ஒரு உற்சாகத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தக்கூடியவர். அவர், மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும்போது இந்நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுவதும் சாலப் பொருத்தமாகும்.

பிற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்கக்கூடிய நமது தாய் மொழியான தமிழ் மொழியை தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள், தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் என்று நாம் பெருமை கொள்ள வேண்டும். என்றைக்குமே நம்முடைய மொழி என்கிற ஒரு உணர்வோடு இருக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் சிறந்த படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போன்றோர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய அனுபவ அறிவுகளை நீங்கள் பெறமுடியும். எனவே, ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த படைப்பாளர்களாக எழுத்தாளர்களாக, இலக்கியவாதிகளாக உருவாக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இதுபோன்ற வாய்ப்புகளை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆகையால் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கியம் சார்ந்த போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகங்கள் மற்றும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புத்தகம் மற்றும் நாணயக் கண்காட்சியினை பார்வையிட்டார்.

விழாவில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட்ஜான், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை) காமாட்சி, எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய திருவிழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சுமார் 5,800 பேர் 10 விதமான போட்டிகளில் கலந்துகொண்டு இறுதியாக 360 மாணவ மாணவியர்கள் தற்போது நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 136 பள்ளிகளிருந்து சுமார் 860 மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு 80 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இப்பொருநை இலக்கிய திருவிழாவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் சிறப்பு பரிசாக ஒரு கல்லூரிக்கு ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையாகவும், பள்ளி மாணவ. மாணவியர்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!